Friday, March 15, 2019

சில இதழ்களில் சில சிறுகதைகள் - பிப்ரவரி மாதம்


            கதைகள் குறித்து எத்தனையோ விளக்கங்கள் வரையறைகள் உண்டென்றாலும், அடிப்படையில் கதைகள் என்பவை ஒரு கருத்தாக்கத்தின் மீதான வாத விவாதங்களின் தொகுப்புகள். இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் தமிழ்ச் சமூகம் கதைகளின் மூலம் எத்தகைய கருத்தாக்கங்களை விவாதித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முயலும் எளிய முயற்சியே இங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

மூங்கில் பூக்கும் தனிமை
வடிவத்தில் நல்ல செய்நேர்த்தியும் உள்ளடக்கத்தில் கனமான கருத்தையும் உள்ளடக்கிய கதைகள் அரிதாகவே தோன்றும். அப்படி, நான் கருதுகிற கதைகளில் ஒன்றாக இந்தக் கதை இருக்கிறது. ஆசிரியர் என்பவர் அனைத்தும் அறிந்தவர், அதிமேதாவி, என்கிற சித்திரங்களே அனைவர் மனதிலும் பதிந்துள்ளது. தமிழ்ச் சமூகத்தில் ஆசிரியரிடம் பழகும் முறை பற்றிக் கூறும் போது கூட அழலின் நீங்கான் அணுகான் - என்று நெருப்பின் தன்மையோடு ஆசிரியரின் தன்மை கூறப்படுகிறது. ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு இணக்கமானவர் என்பதைவிட மாணவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குபவர் என்கிற பிம்பமே பொது சமூகத்தில் ஆழப்பதிந்துள்ளது. ஆசிரியர் X மாணவர் உறவில் காணப்படுகிற  இத்தகைய முரண்பாட்டைச் சித்திரிக்கும் கதைகள் அடங்கிய கதை தொகுப்புகள் (“ஓய்ந்திருக்கலாகாது” பாரதி புத்தகாலயம்) உருவாகும் அளவிற்கு  இங்கு ஆசிரியர் X மாணவர் உறவு சீர்கெட்டுக் கிடைக்கிறது.  இத்தகைய கதைகளின் நீட்சியாக இந்தக் கதையைக் கருதினாலும், இக்கதையின் செய்நேர்த்தி இந்தக் கதையை சிறப்பானதாகக் காட்டுகிறது. சந்தான கிருஷ்ணன் என்கிற ஆக்ஸ்போர்டில் படித்த, ஆசிரியர்களும் கல்லூரி முதல்வரும் கூட பயப்படுகிற, படித்த மாணவர்களை மட்டும் நேசிக்கிற, தேர்வில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாத ஆங்கில ஆசிரியருக்கும், தமிழ் வழியில் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படித்த, ஆங்கிலத்தாளில் கடைசி வரை தேர்ச்சி அடைய முடியாது பட்டப்படிப்பு பெற முடியாத மாணவனுக்குமான உறவை மையமிட்டதே இந்தக்கதை. நன்றாகப் படித்த மாணவர்களுக்கும் ஆசிரியருக்குமான உறவு என்பது பயனை எதிர்நோக்கியதாக இருக்க, கடைநிலை மாணவர்களுக்கும் ஆசிரியருக்குமான உறவு எதிர்பாப்புகளற்ற, ஆசிரியரிடமிருந்து அன்பைக் குறைந்தபட்ச அங்கீகாரத்தை எதிர்நோக்கியதாக இருக்கிறது. ஏதோ ஒரு தருணத்தில் ஏதோ ஒரு காரணத்தால் ஏதோ ஒரு வினாவிற்கு விடை தெரியாத மாணவன், எப்போதுமே ஆசிரியரின் பார்வையில் ஞான சூன்யமாய் மாறிடும் அவலத்தை இந்தக்கதை அற்புதமாக பதிவு செய்திருக்கிறது. ஆக்ஸ்போர்டில் படித்த சந்தானகிருஷ்ணன் “வாட்ஸ் யுவர் நேம்?” என மருத்துவர் கேட்கும் நேரத்தில் திருதிருவென முழுத்தார் என கதை முடியும் போது, எல்லோரும் எப்போதும்  அனைத்து  வினாக்களுக்கும் விடை தெரிந்தவர்களாக இருப்பதில்லை என்கிற உண்மையை முகத்தில் அறைந்தாற் போல சொல்கிறது  கதை.

என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
கதையின் கவர்ச்சிகரமான விளம்பரத்தன்மை கொண்ட தலைப்பின் காரணமாக இக்கதையைப் பற்றி தவறான அணுமானத்திற்குச் செல்லும் முன்பு இக்கதையின் மையத்தைத் தெரிந்து கொள்வது நல்லது. காதல் கவிதைகள் எழுதும் புதிதாக திருமணமான இளம் எழுத்தாளர், தனது மனைவியிடம் தனது முந்தைய காதல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். தனது கவிதைகளில் கற்பனையாக எழுதும் பெயர்களைக் கொண்டிருக்கிற பெண்களையே யதார்த்த வாழ்வில் சந்தித்து அவர்கள் மீது தீராத அன்பு கொள்வதாக மனைவியிடம் குறிப்பிடுகிறார். இதற்கிடையில் தாங்கள் வாடகைக்கு வசிக்கிற வீட்டில் புதிதாக வருகிற இளம்பெண் எழுத்தாளரின் மீது பெரிதும் ஈடுபாட்டுடன் பழகுகிறார், அந்தப் பெண்ணின் பெயரும் கவிதைகளில் இடம்பெற்ற கற்பனை கதாப்பாத்திரத்தின் பெயராக இருப்பதால் மனைவி சந்தேகப்படுகிறார், இறுதியாக வேறு வீட்டிற்கு வாடகைக்குச் செல்கிறார்கள், அந்த வீட்டில் கவிதைகளில் இடம்பெற்ற கற்பனை கதாப்பாத்திரத்தின் பெயர் கொண்ட இளம்பெண் யாரும் இல்லை என்கிற நிம்மதியுடன்  இருக்கையில், அங்கு புதிதாக வரும் இளம்பெண் தானும் கவிதை எழுதுவதாக அறிமுகம் செய்துகொள்கிறாள். கல்லூரி காலத்தில் இந்த எழுத்தாளரின் பெயரைக் கற்பனையாக வைத்தே அந்தப் பெண் கவிதை எழுதியதாகக் கூற, மனைவி அதிர்ச்சியுடன் வேறு வீடு பார்க்க முடிவெடுப்பதாக கதை முடிவடைகிறது. ஜி. ஆர். சுரேந்திரநாத் எழுதியிருக்கும் இக்கதையின் தலைப்பும் கதையின் ஊடாக சொல்லப்படுகிற பாக்யராஜ் திரைப்படமான சின்னவீடு பற்றிய தகவல்களும் கதையின் சுவாரஸ்யத்திற்கு வலுவூட்டுகின்றன.
  தமிழ்ச் சமூகத்தில் நன்றாக அறிமுகமான ஒரு கதையைப் போல் இந்தக்கதை தோன்றினாலும், இந்தக்கதையின் குறிப்பிடத்தகுந்த அம்சம் என நான் கருதுவதை நேர்மையாக இங்கு பதிவு செய்கிறேன். படைப்பின் வழி உருவாக்கப்படுகிற கற்பனை கதாப்பாத்திரங்கள் யதார்த்த வாழ்வில் பிரவேசிப்பது என்பது நம்ப முடியாததாக இருந்தாலும், பல நேரங்களில் படைப்பாளியின் இத்தகைய நோக்கு நிலை தீர்க்க தரிசனமாகக் கருதப்படுகிறது. படைப்பினுடைய இந்தப் பண்பே படைப்பாளியைக் கடவுளுக்கு நிகராக வைத்துப்பார்க்கும் தகுதிப்பாட்டையும்  கொடுக்கிறது. படைப்பாளி பற்றிய இத்தகைய கருத்துருவாக்கத்தையும் இலக்கிய வெளி மாந்தர்களுக்கும் யதார்த்த மாந்தர்களுக்குமிடையே நடைபெறுகிற விளையாட்டினையும் சுவாரஸ்யமாக சொன்ன விதத்தில் இக்கதை நல்லதொரு முயற்சியாகும்.

இடர்
நாம் தினந்தோறும் சந்திக்கின்ற அன்றாட நிகழ்வுகள் செய்திகளாகச் சுருக்கப்பட்டு மானுட வாழ்வென்பது வெறும் புள்ளி விபரங்களாகவும் கணநேர காட்சிப்பதிவுகளாகவும் மாறிக்கொண்டிருக்கிற இவ்வேளையில், அன்றாட நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கிற உணர்வுகளை சிரியான முறையில் எடுத்துரைக்கவும், மானுட உணர்வு நிலைகளுக்கு உண்மையாக மதிப்பளிக்கவும் வழியமைப்பதே இலக்கியத்தின் இயங்கியலாக இருக்கிறது. இலக்கியத்தின் இத்தகைய தன்மைக்கு மேலும் வலு சேர்ப்பதாய் அமைந்திருக்கக்கூடிய சிறுகதை மயிலன் ஜி. சின்னப்பன் எழுதியிருக்கிற இடர் என்கிற கதை. கஜா புயலின் விளைவுகளைக் காட்சிகளாக மாற்றி தங்களின் செலவாணி மதிப்பை உயர்த்திக்கொள்ள  காட்சி ஊடகங்கள் காட்டிய போலித்தனமிக்க கதையாடல்கள் ஒருபுறமிருக்க, புயலின் இழப்புகளை, மரணக் கணக்குகளை, பேரழிவின் இரணங்களை வெறும் எண்களாக புள்ளி விபரங்களாக மாற்றிய ஆட்சியாளர்களின் கதையாடல்கள் மறுபுறமிருக்க, இந்தக் கதையாடல்களுக்குப் பின்னால்  சொல்லித்தீராத துயர்மிக்க கண்ணீர்க் கடலின் ஒரு துளியாக இக்கதையை உணர முடியும். தேசியப் பேரிடராக இதனை அறிவிக்க வேண்டும் என்கிற எந்த அரசியல் சதுரங்க ஆட்டங்களும் அறியாத, வெறும் தென்னந்தோப்பு மட்டுமே வாழ்க்கை என வாழ்ந்த காவிரி டெல்டா  விவசாயிக்கு கஜா புயல் எத்தகைய மீள முடியாத இழப்பைக் கொடுத்திருக்கிறது என்பதையும்,  தமிழ்ச் சமூகத்தில் தென்னை வெறும் மரம் மட்டுமல்ல, பிள்ளையும் கூட. அந்த தென்னம்பிள்ளை கொடுத்த வளமான வாழ்வையும் அந்த தென்னம்பிள்ளை கண்ணெதிரே காணமல் போன வலியையும் இதன் வழி ஒரு குடும்பத்தின் வாழ்வையும்  உணர்வு ரீதியாக பதிவு செய்திருக்கிறது இந்தக்கதை. 

பெய்திருக்க வேண்டிய மழை
காதலைப் பற்றி எவ்வளவு தான் பேசித் தீர்த்தாலும் எழுதித் தீர்த்தாலும் மீண்டும் மீண்டும் புதிதாக சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்களைத் தன்னுள் வைத்திருக்கிறது காதல். பரிசல் கிருஷ்ணா எழுதியிருக்கிற இந்தக் கதையை காதல் கதை என்ற புரிதலுடனேயே என் சராசரி ஆண் புத்தி அணுகுகியது ஆனால், இந்தக் கதை காதலை விட, ஆண் பெண் உறவின் புதிர்த் தன்மையைப் பற்றிய உரையாடலுக்கு முதன்மை கொடுத்திருக்கிறது என்று தோன்றுகிறது. ஹைடெக் யுகத்தின்  நாயகனான  சிவாவின் பார்வையில் பின்னோக்கு உத்தி மூலம் சொல்லப்படுகின்ற கதையில், இன்றைய இளைய சமுதாயத்திடம் வாழ்வில் இடம்பெறுகிற அனைத்து நிகழ்வுகளும் சுவாரஸ்யமாக சொல்லப்படுகிறது. என்ன தான் காலங்கள் மாறினாலும் கருவிகள் மாறினாலும் ஆண்கள் மனது எப்போதும் மாறாது என்பது போல தன்னுடன் நெருங்கிப் பழகும் தோழி ரம்யாவை காதலியாக நினைக்கத் துவங்குகிறான், ரம்யா கார்த்திக் எனும் ஆடவனை விரும்புவதை நாகரீகமாக தெரியப் படுத்துகிறாள். இந்த நிலையில் வழக்கமான ஆண்களைப் போலவே நடந்து கொள்கிறான் வினோத், முடிவில் விரக்தியில் வெளிநாட்டிற்கு சென்று திரும்புகையில் ரம்யாவை சந்திக்கிறான்.  அந்தச் சந்திப்பில் “இந்த உலகத்துல கார்த்திக்குகளுக்குப் பஞ்சமே இல்லை. சிவா கிடைக்கறதுதான் ஒரு பொன்னுக்கு ரொம்பக் கஷ்டம். பாதி சிவாக்களை இவங்களே கார்த்திக் ஆக்கிக்கறாங்க. கார்த்திக்கா ஆக முடியாத சிவாக்கள் என்னத்தையோ இழந்துட்டதா ஃபீல் பண்ணிக்கிட்டுத் திரியறாங்க. அவங்களுக்குத் தெரியறதில்லை .....கார்த்திக்கைவிட சிவா ஸ்பெஷல்னு! என்று ரம்யா கூறுகிறாள். பழக்கப்பட்ட கதை தான் என்றாலும் கதையில் ரம்யா சொல்லும் மேற்கண்ட வரிகள் தான் இந்தக்கதையை உயிரோட்டமுடையதாக்குகிறது. ரம்யாக்கள் தெளிவாக தான் இருக்கிறார்கள் சிவாக்கள் தான் தோற்றத்தில் ஹைடெக்காகவும் உள்ளுக்குள் ஒரு தலை ராகம் பாடுக்கொண்டும் ஆண் பெண் உறவை புரிந்து கொள்ளாத அடிப்படை வாதிகளாக இருக்கிறார்கள்.

போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்
பின் காலனிய ஆய்வாளர்களுக்கும் மாந்திரீக யதார்த்த எழுத்தை விரும்பி வாசிக்கிற வாசகர்களுக்கும் ஆர்வத்தைக் கொடுக்கிற கதையாக எஸ். ராமகிருஸ்ணனின் இந்தக்கதை திகழும் என்பதை எந்தவித ஐயமும் இல்லாமல் கூறலாம். கீழைத்தேய நாடுகளின் விசித்தியமான கற்பனையான குணாதிசியங்களின் மீது நாட்டம் கொண்டு எழுதப்பட்ட புத்தகம் ஒன்றில் காணப்படும் குறிப்புகளின் வழி கதை நிகழ்வுகள் சித்திரிக்கப்படுகிறது. இந்தியத்தன்மை அல்லது இந்தியர்களின் அடையாளம் என்பது இறைத்தன்மையோடு தொடர்புடையது, பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டது   என்ற ஐரோப்பியர்களின் காலனிய மனோபாவம் பற்றிய பதிவுகள் கதை முழுவதும் நிரம்பியுள்ளது. மூன்று தலை கொண்ட மரம், மழைக்கோயில் ஆகிய மீவியல் தன்மை கொண்ட பொருட்களைப் பற்றிய ஐரோப்பியர்களின் தேடலும் அந்த தேடலுக்குப் பின்னால் இருக்கிற இந்தியர்களைப் பற்றிய புனைவுமே கதையின் மையமாக இருக்கிறது. இந்த இரண்டு மீவியல் தன்மை கொண்ட பொருட்களின் பின்புலமாக இந்தியர்களின் கடவுள் நம்பிக்கை, கடவுள்களைப் பற்றிய புதிரான கற்பனைகள் ஆகியவற்றின் மீது மையம் கொண்டுள்ளதாகக் கருதுகிற  ஐரோப்பியர்கள் விழைவு கதையெங்கும் விரவிக்கிடக்கிறது. இவற்றை  அறிந்து கொள்ள  ஐரோப்பியர்கள் எடுக்கிற முயற்சிகள்  ஒரு புறமும்,  இந்த மீவியல் பொருட்களின் மீது இந்தியர்களுக்கு இருக்கிற கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கைகள் மறு புறமும் நிறுத்தி  கதைசொல்லி நிகழ்த்துகிற தத்துவார்த்தமான உரையாடல் கதையின் ஓட்டத்தைத் தொய்வின்றி நடத்திச் செல்கிறது. புதிய தடத்தின் மீது பாதச்சுவடுகளைப் பதிக்க விரும்புகிற வாசகர்களுக்கு நல்லதொரு கதையாக இக்கதை திகழும் என உறுதியாக நம்பலாம்.

இயக்கக்காரி
 இயக்கம் என்கிற சொல் அரசியல் சார்ந்து மலினப்படுத்தப்பட்டு வருவது ஒரு புறமும், சிலருக்கு இந்தத் தேர்தல் தருணத்தில் மட்டுமே இயக்கக்காரியின் இயக்கம் முக்கியமாகி வருவது மறுபுறமும் நடந்து கொண்டிருக்கும் இன்றைய தேர்தல் நேரத்தில், இளங்கோ எழுதியிருக்கும் இந்தச் சிறுகதை விவாதிக்கிற கருத்தாக்கம் முக்கியமான ஒன்றாகும். புகலிட நாட்டில் வாழும் இளைஞன் ஒருவன் தனது பெண் தோழியுடன் செல்லும் வெளிநாட்டுப் பயணமும் அந்தப் பயணத்தில் அவர்களுக்குள் ஏற்படும் நெருக்கம் என நீளும் கதையில், திருப்புமுனை நிகழ்வாக அந்தப் பெண் முன்னாள் இயக்கக்காரி என்பதான தகவல் கூறப்படுவதிலிருந்து கதை மாறுபட்ட திசையில் பயணிக்கத் துவங்குகிறது. அந்தப் பெண் இயக்கத்தில் சேருவதற்குக் காரணமான, அவளது மாமா ஒருவரைச் சந்திப்பதற்காகவே இந்த வெளிநாட்டுப் பயணத்திற்குத் தான் வந்ததாகக் கூறுகிறாள், மிகுந்த தேடலுக்குப்பின்பு அவரைச் சந்திக்குகிறாள், மிகுந்த எதிர்பார்ப்பு மிகுந்த இந்தச் சந்திப்பில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரைத் தாக்குகிறாள். இந்தத் தாக்குதலுக்கான காரணமே இந்தச் சிறுகதையின் மையம். அதாவது சிறு வயதில் அவளது மாமா அவளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தார், இந்தத் துன்பத்திலிருந்து தப்பிப்பதற்காகவே அவள் இயக்கதில் சேர்ந்தாள் என்று கூறுகிறாள். ஈழ விடுதலை இயக்கங்களின் மீது இப்போது பல்வேறு விமர்சனங்கள் வெளிவருகிற இன்றைய சூழலில் இயக்கக்காரி என்கிற இந்தக்கதை பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுக்கக்கூடிய நல்லதொரு கதையாகும்.  
  
ஆண் குழந்தை
கதையின் தலைப்பே கதையின் மையம் எது என்பதை வாசகர்களுக்கு உணர்த்திவிடுகிறது. ஆண் குழந்தை பெறுதல் என்பது உலகம் முழுவதிலும் எவ்வாறு மதிப்புமிக்கதாகப் பார்க்கப்படுகிறய்து ஆண் குழந்தை என்பதற்குப் பின்னால் மறைந்திருக்கிற உடைமை பற்றிய சிந்தனைகள் ஆகியவற்றை சாக்கடல்(Dead sea) நிலவெளியின் பின்புலத்தில் கதையாகச் சித்திரித்திருக்கிறார் ஆசி. கந்தராஜா. கதையில் சாக்கடலைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள், பாலஸ்தீன இஸ்ரேல் எல்லையின் சர்வ சாதரணமாக வெளிப்படும் வெடிகுண்டு சத்தங்கள் ஆகிய விவரிப்புகள் ஒரு புறம் இருந்தாலும், யூசப் மற்றும் அலி ஆகியோரிடையே ஏற்படும் முரண்பாடும் அதற்குக் காரணாமாக இருக்கிற யூசப்பின் ஆண் குழந்தை மீதான வேட்கையும் கதையின் போக்கைத் நடத்திச் செல்கிறது. வியாபாரத்தில் பொறுப்பற்ற, பெண் மோகம் கொள்கிற, ஆண் குழந்தைகளைப் பெற்ற அலி ஒரு புறம், வியாபாரத்தின் மீதும் பணத்தின் மீதும் எப்போதும் குறிக்கோளாக இருக்கிற, எப்போதும் பெண் குழந்தைகளையே பெற்றித்தருகிற மனைவிகளுக்கு மாற்றாக நீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஆண் மகனை எதிர்பார்க்கும் யூசப் மறு புறம் என  இரண்டு எதிர்வுகளின் மூலம் கதையை வழிநடத்திச் சென்றிருக்கிறார் ஆசிரியர். உயிரியலில் பட்டம் படித்த நீனாவிற்கு குழந்தை பிறப்பில் பால் தன்மையை தீர்மானிக்கும் ஜீன்கள் ஆண்களைச் சேர்ந்தது என்ற உண்மையை ஒரு ஐரோப்பிய பெண்ணின் மூலமாகத் தெரிந்து கொள்கிறாள். இதன் பிறகு நீனாவின் மூலமாக யூசப்பிற்கு ஆண் குழந்தை பிறக்கிறது, ஆனால் அந்தக் குழந்தை அலியின் மூலமாகவே பிறக்கிறது என்கிற தகவலை கதை சொல்லி சூசகமாக சொல்வதோடு கதை முடிவடைகிறது. குழந்தையின் பால் தன்மை காரணமாக சமூகத்தில் நிலவுகிற பாகுபாட்டினைக் கூறிய அளவில் கதை முக்கியத்துவமானதாக இருக்கிறது. ஆனால் முதலாம் உலக நாட்டைச் சேர்ந்த பெண்ணின் மூலமாகவே மூன்றாம் உலக நாட்டை சேர்ந்த உயிரியலில் பட்டம் பெற்ற நீனா, குழந்தை பிறப்பு பற்றிய தன்மைகளைத் தெரிந்து கொள்கிறாள் என்கிற பகுதி மட்டும் சற்று நெருடலாகத் தோன்றுகிறது. ஐரோப்பிய மேலாண்மை கொண்ட கருத்துருவாக்கங்களுக்கு எதிராக பின் - காலனிய ஆய்வுகள் தீவிரமாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் மூன்றாம் உலக நாடுகளின் இலக்கியங்கள் விழிப்புடன் வெளிவருவது அவசியம் என்கிற பாடத்தை இந்தக்கதை கூறுகிறது.

கதையல்ல
கதையல்ல என்ற கதையின் தலைப்பிற்கு முரணாக இந்தக் கதையில் நடக்கும் நிகழ்வு கதையாக இருந்துவிடக்கூடாத என்று நினைக்குமளவிற்குமான நிகழ்வுகள் இந்தக் கதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அகதிகளின் மூகாமில் தங்கியிருந்து காணமல் போன ஒரு பெண்ணைப் பற்றியும் அவளது குடும்பத்தைப் பற்றியும் கூறுகிறது இந்தக்கதை. கண்ணத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் தமிழகத்தில் வசிக்கிற சிறுமிக்காக அவளது தாயை இலங்கையில் மாதவன் தேடிச் செல்வதற்கு மாறாக, இலங்கையில் வசிக்கிற  சிறுமிக்காக அவளது தாயை ஒருவர் தமிழக அகதி முகாமிற்கு தேடிச் செல்கிறார். சிறுமியின் தாயை அகதி முகாமில் இருக்கிற அனைவருமே மிக மோசமானவளாகவே நினைக்கின்றனர். அந்தப் பெண்ணை ஏன் அனைவரும் இவ்வளவு மோசமாக நினைக்கின்றனர் என்பதற்கான காரணமே கதையல்ல என்னும் கதையாக விரிந்திருக்கிறது. அனைத்து வசதிகளும் எளிதாக கிடைக்குமிடம் அகதி முகாம் என பொதுப்புத்தியில்  பதிந்திருக்கும் எண்ணங்களுக்கு மாற்றாக வாழ்க்கையின் அன்றாட தேவைகளுக்காக அகதி முகாம்களின் பெண்கள் பாலியல் தொழிலுக்குச் செல்லும் அவலத்தைக் குறித்து பதிவு செய்திருக்கிறது இக்கதை. அகதிகளின் சமூக வாழ்வில் மறைந்திருக்கும் ஆற்ற முடியாத துயரங்களின் ஒரு பகுதியை நேர்மையோடு பதிவு செய்திருக்கும் வகையில் தவிர்க்க முடியாததொரு சிறுகதை கதையல்ல.

மேரி மக்தலீனும் தீர்க்கதரிசியும்
உலகிலுள்ள ஒவ்வொரு பொருட்களுக்குப்பின்னும் சொல்ல முடியாத சொல்லில் அடங்காத எத்தனையோ கதைகள் புதைந்து கிடக்கின்றன. மனித நுகர்வுகளுக்கு எட்டாத இந்தக் கதைகளைப் கைப்பிடித்து அழைத்து வந்து கட்புலனாகும் உலகில் உலவ விடும் இரசவாதத்தைச் செய்யும் சாகசக்காரர்களாக எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.   மேரி மக்தலீனும் தீர்க்கதரிசியும் என்ற பழங்கால ஓவியத்தைச் சாட்சியாக வைத்து ஜினா என்கிற பாலியல் தொழில் செய்கிற பெண்ணின் வாழ்வையும் அவள் எங்ஙனம் பரிதாபமாகக் கொலையுண்டாள் என்பதையும் றஷ்மி கதையாக உருவாக்கியுள்ளார். இயல்பிலேயே அழகும் கலையுணர்வும் செய்நேர்த்தியும் கொண்ட ஜினாவின் மீது ஆடவர்களின் ஏக்கமும் நாட்டமும் அந்நகரத்தில்  அவளைப் புகழ்மிக்கவளாகக் காட்டுகிறது. கதைசொல்லியின் பார்வையில் சொல்லப்படுகிற இக்கதையில், தோற்றத்திலும் செயலிலும் பிறரைக் கவர முடியாத முடி எனும் தனது நண்பனுக்கும் ஜினாவிற்கும் இடையில் முகிழ்க்கும் புதிய உறவு எவ்வாறு கசப்பானதாக மாறி, அவளின் கொலைக்குக் காரணமாகிறது என்பது கூறப்படுகிறது. முடி சராசரியான ஆணின் குணத்துடன் ஜினா தனக்கு மட்டுமே உடைமை என நினைப்பதும், இதற்கு எதிர் நிலையில்  ஜினா தனது  சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னிச்சையாக செயல்பட முடிவெடுப்பதும் என ஆண் பெண் உறவின் முரண்பாடுகளை, சரியான கோணத்தில்  விளக்குவதற்கு இந்தக்கதை முயன்றிருக்கிறது.
     
பசி
பசி என்ற ஒற்றை வார்த்தைக்குள் தான் இந்த உலகம் இயங்குகிறதோ என  எண்ணத்தோன்றும் வகையில் மானுட வாழ்வு பற்றிய சித்திரம் அவலமானதாக மாறிக்கொண்டிருக்கின்றது. பசி என்கிற உணர்வை வார்த்தைகளுக்குள் அடக்க காலந்தோறும் எத்தனையோ படைப்பாளிகள் முயன்றிருக்கின்றனர். அந்த வரிசையில் ந. பிரதீப் எழுதியிருக்கும் பசி என்கிற கதை ஈழ விடுதலை இயக்கக் காலக்கட்டத்தின் நிகழ்வுகளின் பின்புலத்தின் நடந்த நிகழ்வைக் கூறுகிறது. ஈழ விடுதலைப் போரின் பல்வேறு போர் யுக்திகள், செயல்முறைகள் பற்றி இன்று உலகின் கவனத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், அம்பூஸ் படுப்பம் என்கிற   போர் செயல்முறையோடு துவங்கும் கதையில் இளைஞன் ஒருவன் பசியின் காரணமாக களைப்பில் இருக்கிறான். அந்தத் தருணத்தில் இயக்கதைச் சேர்ந்த ஒரு பெண்ணை சந்திக்கிறான், இளைஞன் வீணாக விரயம் செய்த துப்பாக்கி குண்டுக்காக அவனது செயலைக் கண்டிக்கும் பெண் இயக்கத்தின் இருப்பவர்களின் பொறுப்புணர்ச்சி பற்றி விவாதம் செய்கிறாள். இளைஞனின் பசியைப் போக்கும் பொருட்டு அவளுக்கான உணவை அவனிடம் அனுப்புகிறாள். அந்தப் பெண்ணின் இத்தகைய செயல்முறைகளின் காரணமாக அவள் மீது அந்த இளைஞனுக்கு   ஈர்ப்பு வருகிறது.  ஆனால் அவளைத்தேடி சென்று பார்க்கும் பொழுது அவள் அங்கு இல்லை என்று நீளும் கதையின் முடிவுப் பகுதி வாசகர்களுக்கு கனத்த மெளனத்தை உண்டு பண்ணுகிறது. “அவளோட அந்த அன்பு, தாயகப்பற்று, வரிச்சீருடையில் அவளோட கம்பீரமான அழகு, என்ர துவக்கு ரவுண்ஸ் பட்டுச் சறுக்கிய மரம் எல்லாமே அப்படியேதான் இருக்கும். ஆனால் அவள் இருப்பாளா...??? இருந்தாலும் அப்படியே இருப்பாளா...??? கால், கை, கண், கர்பப்பை, எல்லாதோடையும் முழுமனுஷியா இருப்பாளா...??? இல்லாட்டி யுத்தம் தின்ற மிச்சமா இருப்பாளா...???” - என்கிற வரிகளை வாசிக்கும் போது, அதிகார மையங்களின் கோரப்பசிக்கு இரையாகிப்போன எத்தனையோ எளிய மனிதர்களின் அவலத்தை நினைத்து மெல்லிய விசும்பல் சத்தங்களை மட்டுமே எதிர்வினை புரிகிற மனிதன் ஆகி விட்டேனே என புலம்பத்தான் முடிகிறது.

ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம்
தமிழ்ச்சூழலில் பெண் துப்பறிவாளரை கதாப்பாத்திரமாகக்கொண்டு படைப்புகள் வெளிவந்துள்ளனவா எனத் தெரியவில்லை, அதே நேரத்தில் ஆண்கள் அளவிற்கு பெண் துப்பறிவாளர்கள் தமிழ் சமூகத்திற்கு உவப்பானவர்களாக இருக்கமாட்டார்கள் என்பதாலேயே குறிப்பிடத்தக்க பெண் துப்பறிவாளர்கள் உருவாகவில்லை எனத்தோன்றுகிறது. இத்தகைய பின்புலத்தில் அம்பை எழுதியிருக்கக்கூடிய இக்கதையில்  பெண் துப்பறிவாளர் ஒருவரின் குடும்பம், அவர் துப்பறியும் ஒரு மரணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் குழந்தைகள் மீதான வன்முறைகள், குறிப்பாக குழந்தைத் தொழிலாளியாக இருக்கிற ஏழைக்குழந்தைகள் மீதான வன்முறை குறித்தெல்லாம் பெரிய அளவில் யாரும் அக்கறை கொள்வதில்லை. சட்ட ரீதியாக குழந்தைகளைத் தொழிலாளியாக வைத்துக்கொள்வதே குற்றம் என்றாலும் இந்தக் குற்றத்தை பலரும் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். குழந்தையைத் தொழிலாளியாக மாற்றிய சமூகத்தைப்பற்றியும் குழந்தைத் தொழிலாளியான சிறுமியின் மீதான வன்முறையைப் பற்றியும் பதிவு செய்திருக்கும் நுட்பமான கதையாக இக்கதையை அணுக முடியும். கதைக்கு இடையிடையே கதையோடு இணைத்து புரிந்துகொள்ளக்கூடிய செய்திகள் துணுக்குகளாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.  கம்பளங்கள் நெய்யும் பகுதியில் உள்ள குழந்தைகளுக்குக் கல்வியூட்டும் மாலா திட்டம், உத்தரப் பிரதேச மாநிலத்தின் பறவையான ஸாரஸ் என்பதாக இருக்கிற இந்தத் துணுக்குகள் கதையின் உப பிரதிகளாக அமைந்து கதைக்குக் கூடுதல் அர்த்தத்தைக் கொடுக்கின்றன. பெருநகரத்தில் நிகழ்கிற ஒரு சிறுமியின் மரணமும் அந்த மரணத்திற்குப் பின்னால இருக்கிற காரணங்களும் என கதையை எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால், கதை என்பதைத் தாண்டி இதில் சொல்லப்பட்டிருக்கிற விவரணைகள் கவனத்தில் கொள்ளத்தக்கவை.
மாலா திட்டம் போன்ற திட்டங்களின் மூலம் கல்வியை நுகர ஆசைப்படும் ஏழைகள், நவீன அடிமைகளாகப் பெருநகரங்களில் சிக்கித்தவிக்கும் சிறுமிகள், தமது பிள்ளைகளின் வசதியான எதிர்காலத்திற்காக மற்ற பிள்ளைகளின் வாழ்வை சூரையாடுகின்ற உயர் நடுத்தர வர்க்க மற்றும் உயர் வர்க்கங்கள்,  விஞ்ஞானியாகத் துடிக்கும் ஏழைக்குழந்தைகள் என தற்கால இந்தியச்சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தின்  விமர்சனப்பூர்வமாக குரலாக இந்தக்கதை திகழ்கிறது. மாநிலத்தின் பறவையாக அறிவித்தாலும் ஸாரஸ் பறவைகள் வேட்டையாடப்பட்டுக்கொண்டிருக்கும்  ஒரு தேசத்தில், மனிதத்தன்மை மரணித்து போன மனிதர்களிடமிருந்து ஸாரஸ் போன்ற பிஞ்சு நெஞ்சுகளுக்கான கருணையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்கிற வினாவைத் தூண்டுகிறது இந்தச் சிறுகதை.

தேவி
இலக்கியங்களின் புனைவுத்தன்மையை விட, இலக்கிய ஆசிரியரின் வரலாறு குறித்த புனைவுகள் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. அண்மையில் முகநூலில் ஜெயகாந்தனின் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த விவாதங்களின் மூலமாகக் கூட இதனை புரிந்து கொள்ள முடியும். ஒருவகையில் இலக்கியத்திற்கும் இலக்கிய ஆசிரியனுக்கும் அச்சமூகத்தில் இருக்கிற மதிப்பை அளவீடு செய்யும் கருவியாக எழுத்தாளன் குறித்த தொன்மங்களைக் கருத முடியும். எழுத்தாளன் வாழ்வைப் பற்றி சமூகம் கட்டமைக்கிற புனைவிற்கும், மற்றொரு எழுத்தாளன் கட்டமைக்கிற புனைவிற்குமிடையே பாரதூரமான இடைவெளி இருக்கும், இந்த இடைவெளியை வெகு சாமர்த்தியமாய் பயன்படுத்தி வைக்கம் முகமது பஷீர் பற்றிய சுவாரஸ்யமான கதையை தேவி என்னும் பெயரில் உருவாக்கியிருக்கிறார் அபிலாஷ். பஷீரின் படைப்புகள் மீது தீராத வேட்கை கொண்ட தேவி என்னும் தனது மாணவியுடன் பஷீரை சந்திக்கின்ற கல்லூரி பேராசிரியரின் அனுபவமாக கதை சொல்லபட்டிருக்கிறது. பஷீரின் படைப்புகளுடைய பெயர்கள், கதை மாந்தர்கள், நிலவெளி ஆகியவற்றினூடாக கதை பயணிக்கிறது. பஷீரின் இலக்கிய உலகம் எளிமையான மனிதர்களாலும் எளிமையான மொழியாலும் பின்னப்பட்டிருக்கிறது என்பதை கதையின் மொழியிலேயே பதிவு செய்திருக்கிறார் அபிலாஷ். “யாருக்கு வேண்டும் இந்த சுதந்திரம்? வெளியுலகம் இதை விடப் பெரிய சிறை அல்லவா” என்கிற பஷீரின் வரிகள், யாருக்கு வேண்டும் இப்போது சுதந்திரம் காலத்தின் அடிமையாக நான் இருக்கும் போது, யாருடன் இருப்பது சுதந்திரம்? என்ற கதைசொல்லியின் வரிகள், கதை முழுக்க நிறைந்திருக்கும் தத்துவார்த்தமான உரையாடல்கள் வழி கதை விவாத நடையுடன் வாசகருக்கு நல்ல வாசிப்பனுவத்தைக் கொடுக்கிறது. கதையின் முடிவில் பஷீரைச் சந்திக்கச் செல்லும் தேவியும் பஷீரைப் பற்றிய தொன்மங்களூடாகக் கலந்துவிடுகிறாள் என முடியும் பகுதி இனி எதிர் காலத்திலும் கூட பஷீர் புதுப்புது தொன்மங்களால் அலங்கரிக்கப்படுவார் என்பதற்கான கட்டியங்கூறலாகவே பொருள் கொள்ள முடிகிறது.